மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தனது தொழில் அதிபர் நண்பரான ஆஷிஷ் யாதவ் உள்ளிட்ட சிலருடன் இணைந்து மும்பை சாண்டாக்ரூஸில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு உணவருந்த சென்றார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்ஃபி எடுப்பதற்காக பிரித்வி ஷாவை அணுகினார். அவரும், அதற்கு சம்மதித்தார். ஆனால் அந்த நபர் மேலும் ஒரு சில போட்டோ எடுத்துக்கொள்ள வலியுறுத்தினார். ஆனால் இதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் கடும் வாக்குவாதம் செய்து தவறாக நடந்து கொண்டார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த ஹோட்டலின் மேலாளார் உடனடியாக விரைந்து வந்து பிரித்வி ஷாவுடன் தகராறு செய்த நபரை ஹோட்டல் வளாகத்தில் இருந்து வெளியேறும்படி கூறினார். இந்த சம்பவத்திற்குப் பிறகு பிரித்வி ஷாவும், ஆஷிஷ் யாதவும் ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டனர். இதன் பின்னர் அவர்கள் இருவரும் வெளியே வந்த போது, செஃல்பி எடுத்து தகராறு செய்த நபர், கையில் பேஸ்பால் மட்டையுடன் காரின் அருகே நின்று கொண்டிருந்தார். பிரித்வி ஷாவும், அவரது நண்பர்களும் காரில் ஏறி அமர்ந்தனர். அப்போது அந்த நபர் காரின் கண்ணாடியை தாக்கினார். நிலைமை மோசமானதை தொடர்ந்து பிரித்வி ஷா வேறு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
ஆஷிஷ் யாதவும் அவருடன் இருந்தவர்களும் காரை ஓஷிவாராவிற்கு ஓட்டிச் சென்றனர். இந்த காரை 3 பைக்குகள் மற்றும் ஒரு கார் விரட்டிச் சென்றது. அதிகாலை 4 மணி அளவில் லிங்க் ரோடு பகுதியில் காரை திருப்பிய போது, துரத்தி வந்த கும்பல் காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கியது.
தொடர்ந்து பைக்கில் வந்த 6 பேர், காரில் பந்த ஒரு பெண் உட்பட இருவர் ஆஷிஷ் யாதவிடமும் அவருடன் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த கும்பலில்இருந்த பெண், விஷயத்தை முடித்துக்கொள்ள வேண்டுமானால் ரூ.50 ஆயிரம் தர வேண்டும் எனக் கேட்டதுடன் இல்லையென்றால் போலீஸில் பொய் புகார் அளிப்பேன் எனவும் மிரட்டல் விடுத்தார்.
இதைடுத்து ஆஷிஷ் யாதவ் ஓஷிவாரா காவல் நிலையம் சென்றார். அவரை பின்தொடர்ந்து அந்த கும்பலும் சென்றது. சம்பவம் தொடர்பாக ஆஷிஷ் யாதவ் புகார் அளித்தார். இதன் பேரில் ஓஷிவாரா போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 148 (கலவரம்), 384 (மிரட்டி பணம் பறித்தல்), 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் பெண் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.