விளையாட்டு

பேட்டிங்கை அலசி ஆராய்ந்து மெருகேற்ற மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட பேட்கள்: ரோஹித் சர்மா, ரஹானே பயன்படுத்துகின்றனர்

இரா.முத்துக்குமார்

வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கணினிமயமாக்கப்பட்ட சிப்களை தங்கள் மட்டைகளில் பொருத்தி இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, அஜிங்கிய ரஹானே ஆகியோர் விளையாடவிருக்கின்றனர்.

அதாவது ஒவ்வொரு அணியிலும் 3 பேட்ஸ்மென்கள் இத்தகைய சிப் பேட்களை பயன்படுத்துவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

எதற்காக சிப் பொருத்தப்பட்ட பேட் என்றால், மட்டையின் இயக்கம், மட்டையாளரின் நகர்தல் ஆகியவை பற்றிய தரவுகளை சிப்கள் மூலம் சேகரித்து தங்கள் பேட்டிங்கை மேலும் மெருகேற்றிக் கொள்ளலாம், தவறுகளை திருத்திக் கொள்ளலாம் என்பதற்காகவே.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது தொழில்நுட்ப கூட்டாளியான இன்டெல் தொழில் நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இதன் மூலம் தங்கள் ஆட்டத்தை பேட்ஸ்மென்கள் அலசி ஆராயலாம்.

இந்த மைக்ரோ சிப்கள் மட்டையின் கைப்பிடியில் பொருத்தப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் மட்டை சுழற்றிய விதம், ஸ்ட்ரோக்குகள் ஆடும் போது மட்டையின் கோணங்கள் ஆகியவற்றை கணினியில் இட்டு மென்பொருள் மூலம் பிம்பங்களை தரவிறக்கம் செய்து ஆராயலாம்.

அதாவது பேட்ஸ்மென்கள் ஒரு குறிப்பிட்ட ஷாட்டில் தேர்ந்தவர்களாக இருக்கலாம் அதற்கு என்ன காரணம், இதை ஏன் பிற ஷாட்களுக்கும் பயன்படுத்தக் கூடாது என்ற கோணங்களில் இந்த தரவுகளை இந்த சிப்கள் மூலம் ஆராய்ந்து தெளிவு பெற முடியும்.

இது குறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

கிரிக்கெட்டும் ‘ஸ்மார்ட் கிரிக்கெட்’ தளத்துக்கு தன்னை உயர்த்திக் கொள்ள ஐசிசி-யினால் மேற்கொள்ளப்படும் ஏற்பாடாகும் இது. விளையாட்டில் முதல் முறையாக இத்தகைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT