விளையாட்டு

சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் - சாதனை படைத்தார் தீப்தி சர்மா

செய்திப்பிரிவு

கேப் டவுன்: டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா.

நடப்பு டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் சுற்றுப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன்மூலம் டி20 சர்வதேசப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா படைத்தார்.

ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை பொறுத்தவரையிலும், டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையையும் தீப்தி ஷர்மா பெற்றார். ஆடவர் அணியை பொறுத்தவரை டி20 போட்டிகளில் யுஸ்வேந்திர சாஹல் அதிகபட்சமாக 91 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது மகளிர் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா. மேற்கிந்திய தீவுகள் வீராங்கனை அனிசா முகமது 125 விக்கெட்கள் வீழ்த்தி இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

முன்னதாக, இன்றைய ஆட்டத்தில் சிறந்த பிளேயர் விருது வென்றதும் இவர்தான். இன்றைய ஆட்டத்துக்குப் பின் பேசிய தீப்தி, "ட்ரெஸ்ஸிங் ரூமில் விவாதித்த திட்டங்களை களத்தில் செயல்படுத்த முடிந்ததில் மகிழ்ச்சி. 100 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனை உண்மையில் எனக்கு ஒரு மைல்கல். இதில் கூடுதல் மகிழ்ச்சி. மீதமுள்ள உலகக் கோப்பை ஆட்டங்களில் கவனம் செலுத்துவேன்" என்று தெரிவித்துள்ளார்.

25 வயதாகும் தீப்தி சர்மா, சமீப காலமாக இந்திய அணியில் ஆல் ரவுண்டராக ஜொலித்து வருகிறார். இந்திய அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ள அவரை திங்கள்கிழமை நடந்த மகளிர் பிரீமியர் லீக் WPL ஏலத்தில் எடுக்க கடும்போட்டி நிலவியது. இறுதியில், 2.6 கோடி ரூபாய்க்கு தனது சொந்த மாநில அணியான உத்தரபிரதேச வாரியர்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் தீப்தி.

SCROLL FOR NEXT