விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்துவதோடு கோப்பையையும் வெல்வோம்: விவிஎஸ் லக்ஷ்மண் நம்பிக்கை

ஏஎன்ஐ

இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்துவதோடு சாம்பியன்ஸ் கோப்பையையும் தக்க வைத்துக் கொள்ளும் என முன்னாள் வீரர் விவிஎஸ் ல‌ஷ்மண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்தில் தொடங்கி பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடி, முறையே நியூஸிலாந்து, வங்கதேசம் அணிகளை வென்றது. முக்கியமாக வங்கதேச அணியை 84 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து 240 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணியின் ஆட்டம் குறித்து பேசிய முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷமண், "சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா சிறப்பாக ஆடி கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் என வெகு நிச்சயமாக நம்புகிறேன். முக்கியமாக அவர்களது இரண்டு பயிற்சி ஆட்டங்கள் ஆடிய விதத்தை பாருங்கள். இரண்டு போட்டிகளிலும் ஷிகர் தவனின் ஆட்டம் என்னை ஈர்த்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான வாய்ப்பை தினேஷ் கார்த்திக் அற்புதமாக பயன்படுத்திக் கொண்டார். கேதர் ஜாதவ், ரவீந்த்ர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா என பலர் ரன் சேர்த்தனர். இரண்டு போட்டிகளில் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக வீசினர். எதிரணியை திணறடிக்கும் லைன் மற்றும் லெந்தில் வீசினர். ஆக்ரோஷமாக ஆடி விக்கெட் எடுப்பதில் குறியாய் இருந்தனர்" என்றார்.

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் பற்றி பேசுகையில், "அது சிறந்த போட்டியாக இருக்கும். அதிலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி வெகு தீவிரமாக இருக்கும். ப்ரிமிங்கம் மைதானம் நிரம்பி வழியப் போகிறது. நாம் நமது முழு திறமையை காட்டினால் கண்டிப்பா வெற்றி பெறுவோம்" என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்திலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் முறையே ஜூன் 8 மற்றும் 11ஆம் தேதி ஆடவுள்ளது.

SCROLL FOR NEXT