விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுகிறார் கும்ப்ளே: புதிய பயிற்சியாளர் தேர்வு தொடக்கம்

செய்திப்பிரிவு

இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள அனில் கும்ப்ளேவின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை விநியோகித்து அதற்கான தேர்வு பணிகளைத் தொடங்கியுள்ளதாக பிசிசிஐ இன்று அறிவித்தது.

விராட் கோலி தலைமையிலும் மற்றும் அனில் கும்பளேவின் பயிற்சியிலும் இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டதாக பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளது. வரும் ஜூன் 2-ம் தேதி தொடங்க உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரோடு அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற இருக்கிறார்.

இந்த நிலையில் புதிய பொறுப்பாளரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. பிசிசிஐ அமைத்துள்ள 3 பேர் கொண்ட ஆலோசனைக் குழு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும். இந்த குழுவில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லஷ்மண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களே புதிய பயிற்சியாளருக்கான நேர்முகத் தேர்வை நடத்துவார்கள்.

கும்ப்ளே பயிற்சியாளராக இருந்த கால கட்டத்தில் இந்தியா மொத்தம் விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் 12ல் வெற்றி பெற்றது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இழந்த முதல் இடத்தை மீண்டும் இந்திய அணி பிடித்தது.

SCROLL FOR NEXT