நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக வீரராக களம் கண்டுள்ளார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எஸ்.பரத். நாட்டுக்காக அவர் விளையாடும் முதல் சர்வதேச போட்டி இது. அதை முன்னிட்டு அவரை அணைத்து, முத்தம் கொடுத்து வாழ்த்தியுள்ளார் அவரது அம்மா.
29 வயதான அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தார். ரஞ்சிக் கோப்பை தொடரில் முச்சதம் விளாசிய முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தவர். கடந்த 2019 முதல் பேக் அப் விக்கெட் கீப்பராக அவ்வப்போது அணியில் இடம்பெற்று வருகிறார். இருந்தபோதும் ஆடும் லெவனில் அவருக்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.
இந்தச் சூழலில் ரிஷப் பந்த் காயம்பட்டுள்ள காரணத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார். அதோடு முதல் போட்டியில் ஆடும் லெவனிலும் அவர் சேர்க்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாடும் முதல் போட்டி இது.
நாட்டுக்காக முதல்முறையாக களம் காணும் அவரின் ஆட்டத்தை பார்க்க அவரது குடும்பத்தினர் நாக்பூர் மைதானம் வந்துள்ளனர். இந்நிலையில், அறிமுக வீரராக களம் காணும் அவருக்கு டெஸ்ட் கேப் கொடுத்ததும் அவரை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து வாழ்த்தி இருந்தார் அவரது அம்மா கோனா தேவி. இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி உள்ள 305-வது வீரர் கோனா ஸ்ரீகர் பரத். இந்திய அணியின் சீனியர் வீரர் புஜாரா, பரத்துக்கு கேப் கொடுத்திருந்தார்.
முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேனை அவர் ஸ்டம்பிங் செய்து வெளியேற்றி இருந்தார். இப்போது பேட் செய்ய பெவிலியனில் காத்துள்ளார். இதே போட்டியில் சூர்யகுமார் யாதவும் அறிமுக வீரராக களம் கண்டுள்ளார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது அந்த அணி. ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். அஸ்வின், 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.