விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி நாளை தேர்வாக வாய்ப்பு

ஏஎன்ஐ

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி தேர்வு நாளை நடைபெறக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐசிசி-க்கும் பிசிசிஐ-க்கும் வருவாய் பகிர்வு விவகாரம் மற்றும் நிர்வாக முறையில் மாற்றம் ஆகியவை குறித்து பிரச்சினைகள் எழுந்துள்ளதால் வரும் ஜூன் 1-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அணியை அறிவிப்பதற்கான காலக்கெடுவை கடந்தும் இந்த விவகாரத்தில் பிசிசிஐ தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. இதற்கிடையே சாம்பியன் டிராபி தொடரை புறக்கணிக்கும் முடிவை பிசிசிஐ எடுக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுதொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற உள்ள பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு தலைவராக உள்ள சி.கே.கண்ணா கூறும்போது, "சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் திங்கள்கிழமை நடத்தப்படலாம்.

சிறப்பு பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு பிசிசிஐ செயலாளர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கலந்து கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து" என்றார்.

SCROLL FOR NEXT