இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்தத் தொடரில் தரமான ஸ்பெல்லை வீசிய டாப் கிளாஸ் பவுலர்கள் யார், யார் என பார்ப்போம்.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை இந்தத் தொடரில் எதிர்கொள்ள உள்ளது. கடந்த 1996 முதல் இரு அணிகளும் இந்தத் தொடரில் விளையாடி வருகின்றன. இதுவரை 15 தொடர்கள் விளையாடப்பட்டுள்ளன.
அனில் கும்ப்ளே: 2003-04 ஆஸ்திரேலிய பயணத்தில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கும்ப்ளே, முதல் இன்னிங்ஸில் 141 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார். அந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தால் வெற்றி பெற்றிருக்கும். அந்த தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
அஜித் அகர்க்கர்: அதே 2003-04 பயணத்தில் இந்திய அணியின் மற்றொரு பவுலர் அஜித் அகர்க்கர், அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 41 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார். இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அஸ்வின்: 2013 தொடரில் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் 103 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றி இருப்பார். அந்த போட்டிதான் அந்த முறை தொடரின் முதல் போட்டியாக அமைந்தது. முதல் இன்னிங்ஸில் அஸ்வின் இதை செய்திருப்பார். அந்த முறை 4 போட்டிகளையும் இந்தியா வென்றிருக்கும்.
பும்ரா: 2018 ஆஸ்திரேலிய பயணத்தில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் மெல்பர்ன் மைதானத்தில் 33 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளி இருப்பார் பும்ரா. அது கிளாசிக் ரகம்.
ஜேசன் கிரேஜா: 2008 இந்திய சுற்றுப் பயணத்தில் ஆஸ்திரேலிய வீரரன் ஜேசன் கிரேஜா, நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பார்.
நாதன் லயன்: 2014 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் 7 விக்கெட்டுகளை ஆஸி. அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கைப்பற்றி இருப்பார்.