நாக்பூர்: “கவனம் ஆட்டத்தில் இருக்க வேண்டுமே தவிர, ஆடுகளத்தில் அல்ல” என ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் தொடங்க உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட உள்ளது. இரு அணிகளும் நாளை ஆரம்பமாகும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன.
இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்தியாவின் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தை குறித்து தீவிரமாக பேசி வருகிறது. இதற்கு அந்த அணியின் முன்னாள் வீரர்களும் துணை நிற்கின்றனர்.
இந்தச் சூழலில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. “கவனம் ஆட்டத்தில் இருக்க வேண்டும். ஆடுகளத்தில் அல்ல. இரு அணிகளையும் சேர்ந்த திறன் படைத்த 22 வீரர்கள் பார்டர் - கவாஸ்கர் தொடரில் பலப்பரீட்சை செய்ய உள்ளனர்.
சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆட ஒரு திட்டம் வேண்டும். ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ய வேண்டும். இந்தத் தொடர் மிகவும் சவாலானது. அதை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் நாங்கள் உள்ளோம். ஆடும் லெவனை பொறுத்தவரையில் திறன் படைத்த வீரர்களையும் தவிர்க்க வேண்டிய சூழல் உள்ளது. நிச்சயம் அதில் துணிச்சலான முடிவை நாங்கள் எடுப்போம்” என ரோகித் தெரிவித்துள்ளார்.