கேப் டவுன்: மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் வார்ம்-அப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, வெறும் 85 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி உள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. வரும் 10-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையில் இந்த தொடர் அங்கு நடைபெறுகிறது. இந்தியா உட்பட மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்கின்றன. குரூப் மற்றும் நாக்-அவுட் என 23 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த தொடரில் இந்திய அணி குரூப் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளும் இடம் பெற்றுள்ளன. வரும் 12-ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடுகிறது. இந்நிலையில், தொடரின் வார்ம்-அப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா பலப்பரீட்சை செய்தது.
கேப் டவுனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது அந்த அணி. ஷிகா பாண்டே, பூஜா, ராதா யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. ஷெபாலி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிருதி, ரிச்சா கோஷ் என நால்வரும் விரைந்து அவுட்டாகி வெளியேறினர். தீப்தி மட்டும் அதிகபட்சமாக 19 ரன்கள் எடுத்திருந்தார். 15 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களை எடுத்தது இந்தியா. இதன் மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.