புதுடெல்லி: 2014-ம் ஆண்டில் இருந்து மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கான நிதி ஒதுக்கீடு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும் மெகா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களிடம் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். அவர் கூறும்போது,“2014-ம் ஆண்டுக்கு முன்னர் விளையாட்டு அமைச்சகத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.800 முதல் ரூ.850 கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விளையாட்டு வசதிகள் மற்றும் வளங்களை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘கேலோ இந்தியா' திட்டத்துக்கு மட்டும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்படாமல் விளையாட்டு வீரர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. நாட்டின் இளைஞர்களிடையே விளையாட்டின் மீதான ஆர்வமும் திறமைக்கும் குறைவு இல்லை. ஆனால் அரசாங்கத்திடம் இருந்து ஆதரவு கிடைக்காதது தடைகளை உருவாக்கியது. விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சினைகள் தற்போது தீர்க்கப்படுகின்றன. பணம் இல்லாததால் எந்த இளைஞர்களும் பின்தங்கக்கூடாது என்பதில் எங்கள் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது” என்றார்.
2017-ம் ஆண்டு முதல்..
மெகா விளையாட்டு போட்டியானது ஜெய்ப்பூர் மக்களவை பாஜக உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோரின் ஏற்பாட்டின் பேரில்கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கபடி போட்டியை மையமாக வைத்து, தேசிய இளைஞர் தினத்தில் (ஜனவரி 12-ம் தேதி) தொடங்கப்பட்ட மெகா விளையாட்டு போட்டியில் 450-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் 8 சட்டமன்ற மண்டலங்களில் உள்ள வார்டுகளில் இருந்து 6,400-க்கும்மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.