எதிர்வரும் 10-ம் தேதி தொடங்க உள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் தீப்தி முதல் சர்வதேச நாடுகளை சேர்ந்த ஆல்ரவுண்டர்கள் பலர் கலக்க காத்துள்ளனர். அவர்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென் ஆப்பிரிக்க நாட்டில் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. வரும் 10-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையில் இந்த தொடர் அங்கு நடைபெறுகிறது. இந்தியா உட்பட மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்கின்றன. குரூப் மற்றும் நாக்-அவுட் என மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த தொடரில் இந்திய அணி குரூப் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளும் இடம் பெற்றுள்ளன. வரும் 12-ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடுகிறது. இந்திய அணியை ஹர்மன்பிரீத் வழிநடத்துகிறார். ஆஸ்திரேலிய அணி நடப்பு சாம்பியனாக இதில் களம் காண்கிறது. கடந்த முறை இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது.
பொதுவாக கிரிக்கெட் விளையாட்டில் ஆல்ரவுண்டர்களுக்கு எப்போதும் மவுசு இருக்கும். பேட்டிங், பவுலிங் என இவர்கள் அசத்துவார்கள். அந்த வகையில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் கவனிக்கத்தக்க ஆல்ரவுண்டர்கள் விளையாடுகின்றனர்.
அமிலியா கெர்: நியூஸிலாந்து அணியின் 22 வயது வீராங்கனை. லெக் ஸ்பின்னரான இவர் கடந்த 12 மாதங்களாக பேட்டிங்கிலும் பின்னி எடுத்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 என 100+ போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளார் அமிலியா.
மரிசேன் காப்: தென்ஆப்பிரிக்க அணியின் அனுபவ ஆல்ரவுண்டர். ஆட்டத்தின் போக்கை பொறுத்து எங்கு வேண்டுமானாலும் பந்து வீசும் திறன் படைத்த மித வேகப்பந்து வீச்சாளர். பெரிய ஷாட்களும் ஆடுவார். தன் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் ஹாட்-ட்ரிக் கைப்பற்றியவர்.
எலிஸ் பெர்ரி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த அனுபவமிக்க ஆல்ரவுண்டர். கேம் சேஞ்சராக நெடு நாட்களாக பங்களிப்பு கொடுத்து வருகிறார். இவரை எதிரணியினர் கொஞ்சம் கவனத்துடனே எதிர்கொள்வார்கள். 32 வயதான இவர் 131 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 1,418 ரன்கள் மற்றும் 117 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
சோபி டிவைன்: நியூஸிலாந்து அணியின் கேப்டனான இவர் 112 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2,839 ரன்கள் மற்றும் 109 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். களத்தில் இவரது ஆதிக்கம் அதிகம் இருக்கும்.
தீப்தி சர்மா: இடது கை பேட்டிங், சுழற்பந்து வீச்சு என அசத்துபவர் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா. 24 வயதான அவர் இதுவரை இந்திய அணிக்காக 77 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 737 ரன்கள் மற்றும் 82 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் நைடா, இங்கிலாந்து அணியின் நடாலி ஸ்கிவர் ஆகியோரும் இந்த தொடரில் ஆல்ரவுண்டர்களாக அசத்த உள்ளனர்.