விளையாட்டு

ரஞ்சி கோப்பையில் உத்தராகண்ட் அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது கர்நாடகா

செய்திப்பிரிவு

பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் உத்தராகண்ட் அணியை இன்னிங்ஸ் மற்றும் 281 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது கர்நாடகா அணி.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் உத்தராகண்ட் முதல் இன்னிங்ஸில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கர்நாடகா அணி தரப்பில் வெங்கடேஷ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய கர்நாடகா அணி முதல் இன்னிங்ஸில் 162.5 ஓவர்களில் 606 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயஸ் கோபால் 161 ரன்கள் விளாசினார். ரவிகுமார் சமர்த் 82, கேப்டன் மயங்க் அகர்வால் 83 ரன்கள் சேர்த்தனர்.

490 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய உத்தராகண்ட் அணி 3-வது நாள் ஆட்டத்தில் 41 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது திக்சன்ஷு நேகி 27, ஸ்வப்னில் சிங் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய உத்தராகண்ட் 73.4 ஓவர்களில் 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிகபட்சமாக ஸ்வப்னில் சிங் 51 ரன்கள் சேர்த்தார். கர்நாடக அணி சார்பில் விஜய்குமார் வைஷாக், ஸ்ரேயஸ் கோபால் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகா அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. பேட்டிங்கில் 161 ரன்களும், பந்து வீச்சில் 3 விக்கெட்களையும் கைப்பற்றிய ஸ்ரேயஸ் கோபால் ஆட்ட நாயகனாக தேர்வானார். 14 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று 8 முறை கோப்பையை வென்றுள்ள கர்நாடகா 9-வது முறையாக பட்டம் வெல்வதில் முனைப்பு காட்டி வருகிறது.

SCROLL FOR NEXT