விளையாட்டு

ஆன்லைன் விளையாட்டு மசோதா | விதிகளை மறுபரிசீலனை செய்ய இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை மிகப் பெரும் அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேசமயம், ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், ஆன்லைன் கேமிங் துறையை, அதன் வாய்ப்பு பாதிக்கப்படாத வகையில் நெறிப்படுத்த மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவரவுள்ளது. இதுதொடர்பான வரைவு மசோதாவை கடந்த மாதம் 2-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது.

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த சுய ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்படும் என்றும், இந்த ஆணையம் மத்திய ஐடி அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், வீடியோ கேம்களின் உள்ளடக்கங்களை ஆய்வு செய்து அவற்றுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை இந்த ஆணையம் கொண்டிருக்கும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், “ஆன்லைன் கேமிங் வரைவு மசோதா, நோக்கத்தில் சரியானது. ஆனால், திட்டமிடலில் குறைபாடுகளைக் கொண்டுள்ளது” என்று இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த சங்கம் மேலும் கூறுகையில், “ஆன்லைன் கேமிங் துறையை நெறிப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் முன்னெடுப்பு முக்கியமானதுதான். ஆனால், திட்டமிடலில் குறைபாடுகள் உள்ளன. அந்த மசோதாவில் ஆன்லைன் கேமிங் குறித்த வரையறை தெளிவற்றதாக உள்ளது. ஒழுங்குபடுத்த தேவையில்லாத விஷயங்கள் கூட தீவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த வகையில் மசோதாவில் முன்மொழியப்பட்டிருக்கும் பல விதிகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியதாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT