விளையாட்டு

இங்கிலாந்து கேப்டன் குக்கை இந்திய அணி எழும்ப விடக்கூடாது: ரவி சாஸ்திரி

செய்திப்பிரிவு

தொடர் தோல்விகளினால் நெருக்கடியில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக்கை இந்திய அணி எழும்ப விடக்கூடாது அதுதான் இந்தியாவின் உத்தியாக இருக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்திய-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அறிமுக நிகழ்ச்சிக்கிடையே சாஸ்திரி இவ்வாறு கூறியுள்ளார்.

"ஒரு கேப்டன் கடும் நெருக்கடியில் இருக்கும்போது அவரை எழும்ப விடாமல் செய்ய வேண்டும், அவருக்கு ஆட்டத்தை எவ்வளவு கடினமாக்க வேண்டுமோ அவ்வளவு கடினமாக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.

1986ஆம் ஆண்டு டேவிட் கோவர் தலைமை இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியை ரவி சாஸ்திரி நினைவு கூர்ந்த போது, டேவிட் கோவர் மீது அப்போது இதே நெருக்கடி இருந்தது என்றும், அவரை ஒருக்காலும் எழும்ப விடக்கூடாது என்றும் முடிவெடுத்ததாகக் கூறினார்:

”டேவிட் கோவரைப் பொறுத்த வரை நாங்கள் ஒன்றை முடிவு செய்தோம், முதல் டெஸ்ட்டில் அவரை ரன் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்தோம். அவருக்கு இதனால் நெருக்கடி கூடியது, கோவர் கேப்டன்சியை லார்ட்ஸ் டெஸ்டிற்குப் பிறகு இழந்தார். இந்தியா தொடரை வென்றது.

குக் இயல்பாகவே கேப்டன் அல்ல. அவர் ரன்கள் குவிக்கும் ஒரு பேட்ஸ்மென், கேப்டன்சி நெருக்கடியினால் ரன்கள் எடுக்காத குக் வேண்டுமா, அல்லது அவர் ரன்களை எடுக்கும் நிலைக்குத் திரும்ப வேண்டுமா என்பதை இங்கிலாந்து முடிவெடுக்க வேண்டும். சச்சின் டெண்டுல்கருக்கு அதுதான் நடந்தது. ஒரு கேப்டனாக அவர் பேட்டிங்கிற்கு நெருக்கடி ஏற்பட்டது. அவர் அதன் பிறகு முடிவெடுத்தார்”

என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.

SCROLL FOR NEXT