ஒற்றைக் கையில் பேட் செய்யும் ஹனுமா விஹாரி 
விளையாட்டு

‘மனசுல போராட துணிவு இருக்கு’ - மீண்டும் ஒற்றைக் கையில் பேட் செய்த விஹாரி!

செய்திப்பிரிவு

இந்தூர்: நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இரண்டாவது முறையாக ஒரே கையை கொண்டு, இடது கையால் பேட் செய்து அசத்தியுள்ளார் ஹனுமா விஹாரி. காயம்பட்டபோதும் களமிறங்கி கவனம் ஈர்த்துள்ளார் அவர்.

இந்தூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆந்திரப் பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 379 ரன்களை குவித்து ஆள் அவுட்டானது. தொடர்ந்து மத்தியப் பிரதேச அணி 228 ரன்களை எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆந்திரா 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மத்திய பிரதேச அணி விரட்டி வருகிறது.

முன்னதாக, இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆந்திர அணிக்காக விஹாரி பேட் செய்தபோது ஆவேஷ் கான் வீசிய பந்து அவரது மணிக்கட்டு பகுதியை தாக்கியது. அதனால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இருந்தபோதும் முதல் இன்னிங்ஸில் கடைசியாக வந்து அவர் இடது கையில் பேட் செய்திருந்தார். இவர் வழக்கமாக வலது கையில் பேட் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் இரண்டாவது இன்னிங்ஸில் விறுவிறுவென ஆந்திரா விக்கெட்டுகளை இழக்க, அவர் கடைசியாக களம் கண்டார். மீண்டும் ஒற்றை கையை கொண்டு இடது கையில் பேட் செய்திருந்தார். இந்த இன்னிங்ஸில் 16 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகள் அடங்கும். முதல் இன்னிங்ஸில் 57 பந்துகளுக்கு 27 ரன்கள் எடுத்திருந்தார்.

SCROLL FOR NEXT