அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சுப்மன் கில், நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று பார்மெட் கிரிக்கெட்டில் சதம் விளாசிய ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் படைத்துள்ளனர்.
இதோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 63 பந்துகளில் 126 ரன்களை அவர் எடுத்திருந்தார். இதுதான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள முதல் சதம். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிகபட்சமாக கோலி, 61 பந்துகளில் 122 ரன்களும், ரோகித், 43 பந்துகளில் 118 ரன்களும் எடுத்துள்ளனர்.
இந்தப் போட்டியில் 35 பந்துகளுக்கு 50 ரன்களை கில் எட்டியிருந்தார். அடுத்த 76 ரன்களை வெறும் 28 பந்துகளில் எடுத்து மிரட்டினார். அவர் ஆடிய ஒவ்வொரு ஷாட்டும் அட்டகாசம், அற்புதம் என சொல்லும் அளவுக்கு இருந்தது. 15 நாட்கள் இடைவெளியில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சதமும் பதிவு செய்துள்ளார். நடப்பு ஆண்டில் (32 நாட்களில்) 3 சதம் மற்றும் 1 இரட்டை சதம் பதிவு செய்துள்ளார்.
கடந்த 2019 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக கில் விளையாடி வருகிறார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். டொமஸ்டிக் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடி கவனம் ஈர்த்தவர். இந்திய அணிக்காக அண்டர் 19 கிரிக்கெட்டிலும் விளையாடி உள்ளார். 13 டெஸ்ட், 21 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தலா ஒரு சதம் பதிவு செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 4 சதங்கள் பதிவு செய்துள்ளார். இதையெல்லாம் வைத்து அவரை இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் என ரசிகர்கள் போற்றி வருகின்றனர்.