இடது கையில் பேட் செய்யும் ஹனுமா விஹாரி 
விளையாட்டு

ரஞ்சிக் கோப்பை | எலும்பு முறிவால் இடது கையில் பேட் செய்த ஹனுமா விஹாரி

செய்திப்பிரிவு

இந்தூர்: நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் மணிக்கட்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் இடது கையால் பேட் செய்துள்ளார் ஆந்திரப் பிரதேச அணிக்காக விளையாடி வரும் ஹனுமா விஹாரி. அவரது அர்ப்பணிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

ஆந்திர அணி, இந்தூரில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக ரஞ்சிக் கோப்பை காலிறுதியில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆந்திரா 379 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டி நேற்று துவங்கியது. விஹாரி, பேட் செய்த போது ஆவேஷ் கான் வீசிய பந்து அவரது மணிக்கட்டை தாக்கியது. அவர் வலியை பொறுத்துக் கொண்டு பேட் செய்ய முயன்றார்.

இருந்தும் 37 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த போது ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் எலும்பு முறிவு உறுதி செய்திருந்தது. அந்த அணிக்காக ரிக்கி பூஹி மற்றும் கரண் ஷிண்டே ஆகியோர் சதம் விளாசி இருந்தனர். முதல் இன்னிங்ஸில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருந்த போது விஹாரி பேட் செய்ய வந்தார்.

வழக்கமாக அவர் வலது கையால் பேட் செய்வார். ஆனால், காயம் காரணமாக அவர் இடது கையால் பேட் செய்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு கையால் பேட்டை பிடித்தபடி விளையாடி இருந்தார். அந்த நிலையிலும் ஆவேஷ் கான் வீசிய பந்தில் ஒரு பவுண்டரி விளாசி அசத்தி இருந்தார். குமார் கார்த்திகேயா பந்து வீச்சில் ஸ்வீப் ஷாட்டும் ஆடி இருந்தார். 57 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவர் சர்நேஷ் ஜெயின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தில் இருந்து மீள எப்படியும் 5 முதல் 6 வார காலம் வரை தேவை என ஆந்திர அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியை டிரா செய்ய விஹாரியின் பேட்டிங் பெரிதும் உதவியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஸ்மித், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் பேட் செய்திருந்தார்.

SCROLL FOR NEXT