கொல்கத்தா: எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை வரையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களும், பயிற்சியாளர் ராகுல் திராவிடும் செய்ய வேண்டியது குறித்து தனது ஆலோசனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான கங்குலி பகிர்ந்துள்ளார்.
கங்குலி, இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும் சரி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்தபோதும் சரி சிறப்பான பணிகளை செய்துள்ளார். இளம் வீரர்களுக்கு கேப்டனாக இருந்தபோது வாய்ப்பு வழங்கியது மற்றும் வாரிய தலைவராக இருந்தபோது மகளிர் கிரிக்கெட் மேம்பாடு சார்ந்து பணியாற்றதை குறிப்பிட்டு சொல்லலாம்.
இந்தச் சூழலில் எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரையில் இந்திய அணியின் தேர்வுக் குழுவினர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் செய்ய வேண்டியது என்ன என்பதை சொல்லியுள்ளார்..
அதன்படி, “இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணி. நம் நாட்டில் தொழில்முறை ரீதியாக கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் அதிகம். இதில் பெரும்பாலானவர்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை. காரணம் அதற்கான போட்டி மிகவும் அதிகமாக உள்ளதுதான்.
தற்போதைய அணி உலகக் கோப்பை வரை விளையாட வேண்டும் என நான் விரும்புகிறேன். தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் திராவிட் இதை செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். அவர்கள் இந்த அணியை ஒருங்கே வைத்திருக்க வேண்டும். உலகக் கோப்பை தொடர் குறித்து வீரர்கள் கவலை கொள்ள வேண்டாம். சிறப்பான ஆட்டத்தை விளையாடினால் போதும்” என கங்குலி சொல்லியுள்ளார்.