ந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா புத்தாண்டில் தனது கேரியர் கிராண்ட் ஸ்லாம் கனவு நிறைவேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சானியாவுக்கு 2016-ம் ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. சர்வதேச டென்னிஸ் அரங்கில் இரட்டையர் பிரிவில் முதலிடம் வகிக்கும் நிலையில் சானியாவுக்கு பிரெஞ்சு ஓபன் பட்டம் மட்டும் எட்டாக்கனியாகவே உள்ளது.
இதை அவர் கைப்பற்றும் வேளையில் டென்னிஸ் வரலாற்றில் சர்வதேச அளவில் கேரியர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தக்கூடும். சர்வதேச அளவில் நடத்தப்படும் 4 கிராண்ட் ஸ்லாம்களில் சானியா இரட்டையர் பிரிவில் ஏற்கெனவே 2016-ல் ஆஸ்திரேலிய ஓபன், 2015-ல் விம்பிள்டன் ஓபன் மற்றும் இதே ஆண்டில் அமெரிக்க ஓபனிலும் பட்டம் வென்றுள்ளார்.
அதேவேளையில் கலப்பு இரட்டையர் பிரிவில் 2009 ஆஸ்திரேலிய ஓபன், 2012 பிரெஞ்சு ஓபன், 2014 அமெரிக்க ஓபன் ஆகியவற்றிலும் சானியா மகுடம் சூடி உள்ளார். பிரெஞ்சு ஓபன் இரட்டையர் பிரிவில் மட்டும் சானியாவுக்கு பட்டம் கைகூடினால் கேரியர் கிராண்ட் ஸ்லாம் சாதனையை தனக்கு சொந்தமாக்கிக் கொள்வார்.
இந்நிலையில் இந்த கனவு வரும் புத்தாண்டில் நிறைவேறும் என சானியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது:
2016-ம் ஆண்டு எனக்கு நம்ப முடியாத வகையில் இருந்தது. மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்த வேளையில் 8 டென்னிஸ் தொடர்களில் பட்டம் வென்றேன். ஒரு கிராண்ட் ஸ்லாம் வென்ற நிலையில் மற்றொரு கிராண்ட் ஸ்லாமில் இறுதி போட்டி வரை சென்றேன். இதைவிட ஒரு சிறந்த ஆண்டை நான் இனிமேலும் கேட்க முடியாது. நம்ப முடியாத வகையில் அமைந்த இந்த ஆண்டில் இறுதிவரை நம்பர் ஒன் இடத்தில் தொடர்வது பெருமையாக உள்ளது.
2017-ம் ஆண்டில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல விரும்பு கிறேன். இது பிரெஞ்சு ஓபன் இரட்டையர் பிரிவில் கிடைத்தால் ஆச்சரியமானதாக இருக்கும். பட்டம் வெல்லாவிட்டால் அதற்கான என்னை நானே வருத்திக்கொள்ள மாட்டேன். கடந்த சில ஆண்டுகளில் ஏதாவது ஒரு கிராண்ட் ஸ்லாமில் பட்டம் வென்று வந்துள்ளேன். இது ஆச்சரியமாகவும் உள்ளது.
தற்போது இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவாவுடன் இணைந்து விளையாடி வருகிறேன். அவர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களிலும் விளையாடி வருகிறார். எனினும் இப்போதைக்கு ஜோடியை மாற்றும் எண்ணம் இல்லை.
இந்த ஆண்டில் ஸ்டிரைகோவா வுடன் இணைந்து 6 தொடர்களில் விளையாடி உள்ளேன். இதில் இரு தொடர்களை வென்றோம். ஒரு தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறினோம். அனைத்து தொடரையும் நாங்கள் சிறப்பாகவே தொடங்கினோம். ஸ்டிரைகோவா கடுமையாக போராடக்கூடிய வீராங்கனை. இதுதான் அவரை சிறந்த வீராங்கனையான காட்டு கிறது.
மார்ட்டினா ஹிங்கிஸை நான் பிரிந்தாலும் எங்களுக்குள் சிறந்த நட்பு உள்ளது. நாங்கள் இணைந்து விளையாடியபோது சாதித்ததை பெரும்பாலானோர் சாதித்ததில்லை. மார்ட்டினாவிடம் இருந்து நான் அதிகம் கற்றுக் கொண்டேன். ஏனனேனில் அவர் அதிகம் அனுபவம் வாய்ந்தவர். ஆனால் ஸ்டிரைகோவாவும் நானும் ஒரே வயதில்தான் உள்ளோம்.
ஜூனியர் பிரிவில் நாங்கள் இணைந்து விளையாடி உள்ளோம். இதனால் 14 வயது முதலே நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்களாக இருக்கிறோம். வெற்றி ஜோடியை பிரிந்த நிலையில் மற்றொரு ஜோடியை உடனடியாக தேர்வு செய்ததில் நான் அதிர்ஷ்டசாலிதான். அதிலும் நாங்கள் இணைந்து விளையாடிய முதல் பெரிய தொடரனான சின்சினாட்டியில் வெற்றி பெற்றோம்.
எல்லோருமே வெற்றிக் காகத்தான் விளையாடுகிறார்கள். வெற்றி பெற்றாலும், வெற்றி பெறாவிட்டாலும் அதில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும். கலப்பு இரட்டையர் பிரிவில் எனது ஜோடியாக குரோஷியாவின் இவான் டுடிக் உள்ளார்.
ஆனால் கடந்த 4 முதல் 5 மாதங்களாக அவர் முதுகுவலி யால் அவதிப்பட்டு வருகிறார். ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவிலும் இவான் டுடிக் விளையாடக்கூடியவர். அடுத்த சில வாரங்களில் ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் ஈடுபட போதவதாக இவான் டுடிக் கூறியுள்ளார். இதன் பின்னர் அவர் 100 சதவீத உடல் தகுதியுடன் இல்லையென்றால் வேறு யாருடனாவது கலப்பு இரட்டையர் பிரிவில் களமிறங் குவேன்.
இவ்வாறு சானியா மிர்சா கூறினார்.