விளையாட்டு

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீதான புகாரை விசாரிக்க மேரி கோம் தலைமையில் 5 பேர் குழு அமைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைளையும் தற்காலிகமாக நிறுத்திவைத்து வைத்து உத்தரவிட்டுள்ள மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் கூட்டமைப்பின் அன்றாட பணிகளை நிர்வகிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 5 பேர் கொண்ட மேற்பார்வை குழுவையும் அமைத்துள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தினர். அவர், பதவிவிலகக்கோரி முன்னணி வீராங்கனைகளான வினேஷ் போகத், சரிதா, சாக் ஷி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்ட பலர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த வாரம்போராட்டம் நடத்தினர். 3 நாட்களாக நீடித்த இந்த போராட்டம் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அனைத்துநடவடிக்கைளையும் தற்காலிகமாக நிறுத்திவைத்து வைத்து உத்தரவிட்டுள்ளது மத்திய விளையாட்டு துறை அமைச்சகம். மேலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் துணைச் செயலாளர் வினோத் தோமர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 5 பேர் கொண்ட மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், முன்னாள் பாட்மிண்டன் வீரர் திருப்தி முர்குண்டே, ஒலிம்பிக் பதக்க மேடை இலக்கு திட்டத்தின் முன்னாள் சிஇஓ ராஜகோபாலன் மற்றும் முன்னாள் சாய் நிர்வாக இயக்குநர் ராதிகா ஸ்ரீமன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த மேற்பார்வை குழு ஒரு மாத காலத்துக்குள் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்தும் விதி முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும். மேலும் இந்த குழு அடுத்த ஒரு மாதத்துக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அன்றாட நிகழ்வுகளை கவனித்துக்கொள்ளும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT