மும்பை: எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் சர்பராஸ் கானுக்கு இடம் கிடைக்கவில்லை. அது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது பாணியில் கருத்து சொல்லி உள்ளார்.
25 வயதான சர்பராஸ் கான் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த இரண்டு ரஞ்சிக் கோப்பை தொடரில் இவர்தான் மும்பை அணி சார்பில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன். அவரது பேட்டிங் சராசரியும் அபாரமாக உள்ளது.
அவர் விளையாடிய கடைசி 10 ரஞ்சி போட்டிகளில் 4 சதங்களை பதிவு செய்துள்ளார். அண்மையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 125 ரன்களை குவித்திருந்தார். இருந்தபோதும் இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. அதற்கு அவரது உடல் எடை காரணமாக சொல்லப்பட்டது.
“அவர் பதிவு செய்துள்ள ரன்களுக்காக நிச்சயம் அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான அந்த ஃபிரேமில் இருந்திருக்க வேண்டும். அவருக்கான அங்கீகாரத்தை தேர்வுக் குழு வழங்க வேண்டும்.
நீங்கள் ஒல்லியான மற்றும் ட்ரிம்மானவர்களை எதிர்பார்த்தால் பேஷன் ஷோவுக்குதான் செல்ல வேண்டும். அங்கு இருப்பவர்களை தேர்வு செய்து வந்து அவர்கள் கையில்தான் பேட்டையும், பந்தையும் கொடுக்க வேண்டும். கிரிக்கெட் விளையாட்டு இப்படி செல்லக் கூடாது.
கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு ஷேப் மற்றும் அளவில் வீரர்கள் இருப்பார்கள். அதற்கு உதாரணமாக டேவிட் பூன், ரணதுங்கா போன்றவர்களை சொல்லலாம். அவர்கள் ஆடாத ஆட்டமா என்ன? அவர் கிரிக்கெட் விளையாட ஃபிட்டாக உள்ளார். அது உங்களுக்கு தெரியவில்லையா. அதே போல அவருக்கு ஆடும் லெவனில் இடம் இல்லை என்றால் அணியில் தேர்வு செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக அவர் ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து விளையாடுவார்” என கவாஸ்கர் சொல்லியுள்ளார்.