விளையாட்டு

கருண் நாயர், ராகுல் உள்ள கர்நாடகத்தை 88 ரன்களுக்குச் சுருட்டியது தமிழ்நாடு அணி

இரா.முத்துக்குமார்

விசாகப்பட்டிணத்தில் நடைபெறும் ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டியில் தமிழக வேகப்பந்து வீச்சுக்கு கர்நாடக அணி 88 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சென்னை டெஸ்ட் முச்சத சாதனையாளர் கருண் நாயர் 14 ரன்களுக்கும், இரட்டைச்சதத்தை 1 ரன்னில் நழுவ விட்ட கே.எல்.ராகுல் 4 ரன்களுக்கும் முறையே தமிழக வேகப்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் கிறிஸ்ட் மற்றும் டி.நடராஜன் ஆகியோரிடம் ஆட்டமிழந்தனர்.

தமிழ்நாடு அணியில் வேகப்பந்து வீச்சாளர் அஸ்வின் கிரிஸ்ட் 13.1 ஓவர்களில் 5 மெய்டன்களுடன் 31 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டி.நடராஜன் 9 ஓவர்களில் 3 மெய்டன்களுடன் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முதல் நாள் ஆட்ட முடிவில் தமிழக அணி தனது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து 23 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் தினேஷ் கார்த்திக் 31 ரன்களுடனும் அபினவ் முகுந்த் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

விசாகப்பட்டிணம் பிட்ச் அயல்நாட்டு அணிகளுக்கு குழி-மண் பிட்சாக இருந்தது, ஆனால் இன்று பசுந்தரையாக இருந்தது. டாஸ் வென்ற கேப்டன் அபினவ் முகுந்த் முதலில் கர்நாடக அணியை மிகச்சரியாக பேட் செய்ய அழைத்தார்.

டி.நடராஜன் என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் 2-வது ஓவரின் 3-வது பந்தை அருமையான அவுட்ஸ்விங்கராக வீச 4 ரன்களில் இருந்த ராகுல் எட்ஜ் செய்வதை தவிர வேறு வழியில்லை. 2-வது ஸ்லிப்பில் அபராஜித் பிடித்துப் போட்டார். குனைன் அப்பாஸ் என்ற வீரர் 24 பந்துகளில் ஒரு 15-18 பந்துகளாவது பீட் ஆகியிருப்பார், இவர் அஸ்வின் கிரிஸ்டின் வைடு பந்தை கல்லியில் கேட்ச் கொடுத்து முடிந்தார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் 5 ஓவர் 3 மெய்டன் 5 ரன் 1 விக்கெட் என்ற அபாரமான பந்து வீச்சில் மீண்டும் வந்து தொடக்க வீரர் சமர்த் என்பவரை வீழ்த்தினார். அபிமன்யு மிதுனுக்கு நடராஜன் அருமையான பவுன்சரை வீழ்த்தி காலி செய்தார். மணீஷ் பாண்டே, இவர் கர்நாடக அணியில் அதிகபட்சமாக 28 ரன்களை எடுத்தும் ஸ்டூவர்ட் பின்னி ரன் எடுக்காமலும் அஸ்வின் கிரிஸ்டிடம் பெவிலியன் திரும்ப கர்நாடகம் உணவு இடைவேளையின் போது 72/6 என்று சரிந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு விழுந்த 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகளை அஸ்வின் கிரிஸ்ட் சாய்த்தார். இதில் டெஸ்ட் முச்சத நாயகன் கருண் நாயர் (14) விக்கெட்டும் அடங்கும். இவர் விக்கெட் கீப்பர் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கர்நாடகம் 37.1 ஓவர்களில் 88 ரன்களுக்குச் சுருண்டது. ஆட்ட முடிவில் தமிழக அணி 23 ரன்கள் முன்னிலை பெற்று 111/4 என்று உள்ளது.

SCROLL FOR NEXT