இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா வரவிருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியுடன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியுடன் தொழில்முறை டென்னிஸில் இருந்து முற்றிலுமாக ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே கடந்த 2018-லேயே சானியா மிர்சா தொழில்முறை டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்திருந்தார். ஆனால், முழங்கையில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அதனை செயற்படுத்தவில்லை. இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) ட்விட்டரில் ஓய்வு பற்றி அறிவித்திருந்தார்.
அந்த நீண்ட பதிவின் சாராம்சம்: 30 வருடங்களுக்கு முன்னர் 6 வயது சிறுமி ஒருவர் நிஜாம் க்ளப் டென்னிஸ் கோர்ட்டில் தன்னை அனுமதிக்குமாறு பயிற்சியாளரிடம் சண்டை போட்டார். ஆம், கனவுகள் எப்போதும் சிறு வயதில் ஆரம்பித்துவிடுகின்றன. கடவுளின் அருளால் நான் கண்ட கனவின்படி டென்னிஸ் வீராங்கனையாகி கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்றேன். ஒரு சில பதக்கங்களையும் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளேன்.
என் தேசத்துக்காக பதக்கங்கள் வாங்குவதுதான் எனது பெரிய கவுரவம். நான் பரிசு பெற நிற்கும்போது தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு மூவர்ணக் கொடி ஏறிய தருணம் உணர்வுபூர்மானவை. இதை எழுதும்போது எனக்கு மெய் சிலிர்க்கிறது. என் கண்கள் பனிக்கின்றன.
இவை அனைத்துமே என் பெற்றோர், சகோதரிகள், குடும்பம், பயிற்சியாளர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள், ரசிகர்கள், ஆதரவாளர்கள் பங்களிப்பு இல்லாமல் நடந்திருக்காது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது குடும்பத்தினரின் ஆதரவுடன் எனது கனவு வாழ்க்கையை நான் வாழ்ந்ததற்காக மகிழ்ச்சி கொள்கிறேன். 20 ஆண்டுகளாக தொழில்முறை டென்னிஸிலும் 30 ஆண்டுகளாக டென்னிஸ் வீராங்கனையாகவும் இருந்துள்ளேன். இதைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது. எனது கிராண்ட் ஸ்லாம் கனவு 2005-ல் தொடங்கியது. அந்த வகையில் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியுடன் முடிப்பது என்பதுதான் சிறந்த கிராண்ட ஸ்லாம் பயணமாக இருக்கும். கடந்த 20 ஆண்டுகளில் என்னால் சாதிக்க முடிந்தவற்றிற்காக நான் பெருமிதம் கொள்கிறேன். இந்த பெருமித உணர்வும், மகிழ்ச்சியும்தான் நான் எடுத்துச் செல்லும் சுகமான நினைவுகளாக இருக்கும்.
ஆம், வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து செல்ல வேண்டும். இது முடிவு அல்ல. இது இன்னொரு துவக்கம். புதிய கனவுகள், புதிய இலக்குகள் நோக்கிய பயணத்திற்கான தொடக்கம். இப்போது என் மகனுக்கு நான் இன்னும் அதிகமாக தேவைப்படுகிறேன். அவனுக்காக கூடுதல் நேரம் செலவழித்து வாழக்கூடிய நாட்களை நான் எதிர்பார்த்திருக்கிறேன்.
என் டென்னிஸ் வாழ்வின் மிகப்பெரிய நினைவாக நான் சுமக்கப்போவது, நான் வெற்றிபெறும் போதெல்லாம் எனது தேசமக்கள் ஆதரவாளர்கள் முகங்களில் கண்ட மகிழ்ச்சியும், பெருமித உணர்வும் தான் என்று சானியா மிர்சா பதிவிட்டுள்ளார்.