விளையாட்டு

விராட் கோலி நடத்தை: சுனில் கவாஸ்கர் அதிருப்தி

இரா.முத்துக்குமார்

மொஹாலி டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட இறுதியில் விராட் கோலி மைதானத்தில் நடந்து கொண்ட விதம் சுனில் கவாஸ்கரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது.

3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்து செல்லும் போது, விராட் கோலி தனது விரலை வாயில் வைத்து ‘உஷ்’ என்பது போல் செய்கை செய்தார்.

இந்தச் செய்கை குறித்து சுனில் கவாஸ்கர் கூறும்போது, “என்ன கூறியிருந்தாலும் சரி, இத்தகைய நடவடிக்கைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை.

அவுட் ஆகி வெறுப்பில் செல்லும் வீரரின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் விதமாக செய்வது நாகரிகமல்ல. அவரே அவுட் ஆகிச் செல்கிறார், நீங்கள் எதற்கு அவருக்கு வழியனுப்பு செய்கை செய்ய வேண்டும்?

நம் அணி வீரரைப் பாராட்டுங்கள், பார்த்திவ் படேல் மீண்டும் வந்து அருமையாக ஆடுவதைப் பாராட்டுங்கள். அதைவிடுத்து தேவையில்லாமல் எதிரணி வீரர்களைச் சீண்டுவது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியதாகும். கிரிக்கெட்டில் இதனை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, அனுமதிக்கவே முடியாது” என்றார்.

விராட் கோலி அவுட் ஆகிச் செல்லும் போது பென் ஸ்டோக்ஸ் செய்த செய்கைக்கு பதில்தான் விராட் கோலி செய்தது என்று சில தரப்பினர் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT