கொல்கத்தா: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட் செய்து 215 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் விக்கெட் வீழ்த்தி அசத்தி இருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த அணி டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், ஒருநாள் தொடரிலும் 0-1 என பின்னிலையில் உள்ளது. கவுகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணிக்காக அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் நுவனிது பெர்னாண்டோ இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். அவிஷ்கா 20 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் வந்த குசல் மென்டிஸ் உடன் 73 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் நுவனிது பெர்னாண்டோ. இருந்தும் அதன் பிறகு அந்த அணிக்கு நிலையான பார்ட்னர்ஷிப் அமையவில்லை.
மென்டிஸ், 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார். தனஞ்ஜெய டி சில்வா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். தொடர்ந்து நுவனிது பெர்னாண்டோ, 50 ரன்களில் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து சீரான இடைவெளியில் இலங்கை விக்கெட்டுகளை இழந்தது. கடந்த போட்டியில் சதம் விளாசிய அந்த அணியின் கேப்டன் ஷனகா 2 ரன்களில் வெளியேறினார்.
39.4 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார். இந்தப் போட்டியில் 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை வெல்லும்.