விளையாட்டு

உணவு டெலிவரி ஊழியராக பணிபுரியும் கால்பந்து வீராங்கனை!

செய்திப்பிரிவு

விளையாட்டுத் துறையிலேயே தொழில் அமைத்துக் கொள்வது என்பது இந்தியாவில் இன்னமும் சவாலாகத்தான் இருக்கிறது. சிறுவயதில் ஸ்போர்ட்ஸ்வுமன் அல்லது ஸ்போர்ட்ஸ்மேன் கனவு கண்டு முன்னேறுபவர்கள் தங்கள் பயணத்தின்போது குடும்பம், பணத் தேவை என ஏதேனும் காரணங்களால் அதை துறக்க வேண்டியுள்ளது.

வாழ்வாதாரத்திற்காகவே அவ்வாறாக வேறு வேலைக்குச் செல்லும் வீரர்கள் நிறைய பேர். அண்மையில் அவ்வாறாக இந்திய கால்பந்து வீராங்கனை ஒருவர் உணவு டெலிவரி பிரதிநிதியாக மாறியது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

விளையாட்டுத் துறையிலேயே தொழில் அமைத்துக் கொள்வது என்பது இந்தியாவில் இன்னமும் சவாலாகத் தான் இருக்கிறது. என்பதற்கு இன்னுமொரு சான்றாக மாறியுள்ளது அந்த வைரல் வீடியோ. அதில் இடம்பெற்றிருக்கும் கால்பந்து வீராங்கனை பொலாமி அதிகாரி. இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். அண்டர் 16 பிரிவில் பொலாமி மேற்கு வங்கத்தை பிரதிநித்துவம் செய்து சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஜொமாட்டோ நிறுவனத்திற்காக உணவு டெலிவரி செய்யும் அவர், அன்றாடம் ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பாதிக்கிறார். அந்த வீடியோவில் பொலாமி கூறுகையில், “நான் பிரிட்டன், ஜெர்மனி, இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்று இந்தியாவுக்காக விளையாடியுள்ளேன். என் சிறுவயதிலேயே தாய் இறந்துவிட்டார். அதனால் குடும்பத்தை சுமக்கும் பாரம் என்மேல் தான் உள்ளது. எனக்கு ஒரு அக்கா இருக்கிறார். அவர் திருமணமாகி சென்றுவிட்டார். இப்போது சாருசந்திரா பல்கலைக்கழகத்தில் படிக்கிறேன். பகுதி நேரமாக ஜொமாட்டோவில் உணவு டெலிவரி செய்கிறேன்” என்றார்.

இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதன் கீழ் ஒருவர், கிரிக்கெட்டை தவிர வேறு விளையாட்டுகளில் இருக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு இதுபோன்று நடப்பதை நான் நிறையவே பார்த்துள்ளேன். குத்துச்சண்டை, ஹாக்கி, இப்போது கால்பந்து என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு நபர், இது போன்ற நபர்களுக்கு உரிய வேலை வாங்கி கவுரவம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT