கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் இன்று தொடங்குகிறது. ஆயிரம் புள்ளிகளும் சுமார் ரூ.10.23 கோடி பரிசுத் தொகையும் கொண்ட இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்சயா சென், 8-ம் நிலை வீரரான சகநாட்டைச் சேர்ந்த போட்டியாளர் ஹெச்.எஸ்.பிரனாயுடன் முதல் சுற்றில் மோதுகிறார்.
முன்னாள் முதல் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் ஜப்பானின் கென்டோ நிஷிமோட்டோவை சந்திக்கிறார். இதில் ஸ்ரீகாந்த் வெற்றி பெறும்பட்சத்தில், போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் ஜோனதான் கிறிஸ்டியுடன் மோதுவார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினுடன் மோதுகிறார்.
சிந்து கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச போட்டியில் விளையாடிருந்தார். கணுக்கால் காயத்தால் அவதிப்பட்ட அவர் சுமார் 5 மாதங்களுக்கப் பிறகு மீண்டும் சர்வதேச போட்டியில் களமிறங்குவதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.சாய்னா நெவால் தனது முதல் சுற்றில் சீனாவின் ஹன் யியையும், ஆகர்ஷி காஷ்யப் சீன தைபேவின் ஸூ வென்ஷியையும், மாளவிகா பன்சோத் கொரியாவின் அன் செ யங்கையும் எதிர்கொள்கின்றனர்.