ஆக்லாந்து: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் காயம் காரணமாக விலகிய நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மேட் ஹென்றிக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது மேட் ஹென்றிக்கு வயிற்று பகுதியில் வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு 2 முதல் 4 வார காலங்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர். இதனால் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்களில் இருந்த ஹென்றி விலகினார்.
இந்நிலையில் அவருக்கு பதிலாக டக் பிரேஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 32 வயதான பிரேஸ்வெல் கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி இருந்தார். இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 18-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.