லாகூர்: தினமும் 24 முட்டைகள் சாப்பிடுவேன் என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப். பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் பவுலர்.
29 வயதான அவர் நெட் பவுலராக அணிக்குள் வந்தவர். தனது அபார பந்துவீச்சு திறனை நிரூபித்து அணியில் தனக்கான இடத்தை தக்க வைத்தவர். கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானார். இதுவரை மூன்று பார்மெட்டையும் சேர்த்து 102 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
இந்த நிலையில் அண்மையில் பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அவர் முட்டை மீது தனக்கு உள்ள ஈர்ப்பு குறித்து பகிர்ந்திருந்தார். உடல் எடையை கூட்ட வேண்டி இந்த டயட்டை அவர் பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.
“தினமும் 24 முட்டை சாப்பிடுவேன். அதை மூன்று வேளைக்கு எட்டு எட்டாக பிரித்துக் கொள்வேன். காலை உணவின் போது 8 முட்டை, மதிய சாப்பாட்டின் போது 8 முட்டை மற்றும் இரவு உணவின் போது 8 முட்டை என சாப்பிடுவேன். முதன் முதலில் நான் கிரிக்கெட் அகாடமிக்குள் நுழைந்த போது அங்கு முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதை பார்த்து நாம் கோழிப் பண்ணைக்கு வந்து விட்டோமா என்ற சந்தேகம் இருந்தது.
பின்னர் எனது பயிற்சியாளர் ஜாவேத் எனக்கான டயட் குறித்து சொல்லி இருந்தார். நான் அப்போது 72 கிலோ எடை தான் இருந்தேன். எனது உயரத்திற்கு 82 முதல் 83 கிலோ வரை உடல் எடை இருக்கலாம் என தெரிவித்தார். அதனால் அவர் சொல்படி முட்டைகளை சாப்பிட ஆரம்பித்தேன். இப்போது 82 கிலோ எடை உள்ளேன். அதே போல நான் நெட் பவுலராக இருந்து பிரதான அணியில் இடம் பிடித்தவன் என்பது ரவி சாஸ்திரிக்கு தெரியும். நான் அவரை சந்திக்கும் போதெல்லாம் அங்கிருந்து வந்து ஜெயித்தவன் என சொல்வார்” என ஹரிஸ் ரவூப் தெரிவித்துள்ளார்.