சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சந்தித்துள்ளார் நடிகர் டொவினோ தாமஸ். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதோடு தோனியுடன் கூலாக நேரத்தை செலவிட்டதாகவும் அவர் சொல்லியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு உள்ள ரசிகர்களின் படை மிகவும் பலமானது. அதில் ஒருவர்தான் நடிகர் டொவினோ தாமஸ். மலையாள மொழிப் படங்களில் அதிகம் நடித்து வருபவர். தமிழில் ‘மாரி 2’ படத்தில் நடித்துள்ளார். இந்தச் சூழலில்தான் தோனியை அவர் சந்தித்துள்ளார்.
“இந்நேரம் மிகவும் கூலாக கடந்தது. கேப்டன் கூல் உடன் நேரம் செலவிட்டது சிறந்த அனுபவமாக அமைந்தது. நாம் திரையில் பார்த்து சிலாகித்த அதே கூலான நபராகவே நேரிலும் இருந்தார். இருவரும் நிறைய பேசி மகிழ்ந்தோம். இந்த வாய்ப்புக்காக உண்மையிலேயே நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அனைவருக்கும் சிறந்ததொரு ரோல் மாடல். உங்கள் பயணம் மென்மேலும் மிளிர வாழ்த்துகள்” என டொவினோ தாமஸ் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது இருவரும் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்திருந்துள்ளனர்.
தோனி சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி உள்ளார். தோனி என்டர்டைன்மென்ட் என்ற பெயரில் இயங்கும் அந்நிறுவனம் வரும் நாட்களில் சில முக்கிய திரைப்படங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.