மும்பை: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் போதுமான உடற்திறன் பெறாத காரணத்தால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2022 செப்டம்பரில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார். முன்னதாக, இதே சிக்கல் காரணமாக அவர் ஆசியக் கோப்பை தொடரையும் மிஸ் செய்திருந்தார். இந்த நிலையில் அண்மையில் அவர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டார். தற்போது இந்த தொடரில் இருந்து அவர் விலகி உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் பூரணமாக குணம் அடையாதது இதற்கு காரணம் தெரிகிறது. இதனை பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தொடர் 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அண்மையில் முடிந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தது இந்தியா.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே அறிவித்த ஒருநாள் அணியை கொண்டு இந்த தொடரில் விளையாடும் எனத் தெரிகிறது.
இந்திய ஒருநாள் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், சஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங்.