விளையாட்டு

ஆஸி.யால் வீழ்த்த முடியாத அசார் அலி 205 ரன்கள்: ரிச்சர்ட்ஸ் சாதனையை உடைக்கும் முன்னர் டிக்ளேர்

இரா.முத்துக்குமார்

விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை அசார் அலி உடைக்கும் முன்னரே பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தார்.

மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தொடக்க வீரர் அசார் அலியை ஆஸ்திரேலியாவினால் வீழ்த்த முடியவில்லை, பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரில் அசார் அலி மட்டும் 205 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

மொத்தம் 364 பந்துகளைச் சந்தித்த அசார் அலி 20 பவுண்டரிகளுடன் 205 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த போது 443/9 என்ற நிலையில் மிஸ்பா உல் ஹக் டிக்ளேர் செய்தார்.

ஒரே ஆண்டில் இருமுறை இரட்டைச் சதம் அடித்த சாதனையை நிகழ்த்திய முதல் பாகிஸ்தானிய வீரரானார் அசார் அலி. மேலும் மெல்போர்னில் எதிரணி வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோருக்கான சாதனையை வைத்திருப்பவர் விவ் ரிச்சர்ட்ஸ். இவர் 1984-ம் ஆண்டு மெல்போர்னில் 208 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்து வந்தது. இந்த இன்னிங்ஸில் ரிச்சர்ட்ஸ் எதிர்கொண்ட பந்துகள் 245, இதில் 22 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடங்கும்.

இந்நிலையில் அசார் அலி 205 ரன்களை எடுத்திருந்தபோது இன்னும் 4 ரன்களே ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடிக்க ஏற்பட்ட அரிய வாய்ப்பைப் பயன்படுத்தாமல் மிஸ்பா உல் ஹக் டிக்ளேர் செய்தார்.

இந்தப் பட்டியலில் இந்தியாவின் விரேதிர சேவாக் 5-ம் இடத்தில் உள்ளார். இவர் 2003-ம் ஆண்டு மெல்போர்னில் 195 ரன்களை விளாசினார். 233 பந்துகளைச் சந்தித்து 25 பவுண்டரிகள் 5 சிச்கர்களை விளாசி டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை தூக்கி எறிந்தார் சேவாக்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 6 டெஸ்ட் போட்டிகளில் அசார் அலி 3 சதங்களுடன் 70க்கும் மேல் சராசரி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT