அபினவ் பிந்த்ரா மற்றும் ரிஷப் பந்த் | கோப்புப்படம் 
விளையாட்டு

ரிஷப் பந்த்துக்கு உளவியல் உறுதுணையும் தேவை: அபினவ் பிந்த்ரா கருத்து

செய்திப்பிரிவு

மும்பை: கடந்த வாரம் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்துக்கு உளவியல் ரீதியிலான உறுதுணையும் தேவை என்று இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா வலியுறுத்தியுள்ளார். ரிஷப் பந்த் உடல் நலனில் அதீத கவனம் செலுத்தும் வகையில் பிசிசிஐ மேற்கொள்ளும் முயற்சிகளை அவர் பாராட்டியும் உள்ளார்.

கடந்த 30-ம் தேதி டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்தபோது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடைபெற்றது. கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த அவரை அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. நேற்று வரை டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சூழலில் தனது கருத்தை அபினவ் பிந்த்ரா பகிர்ந்துள்ளார். “ரிஷப் பந்த குணமடைய பிசிசிஐ அற்புதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சையின் ஒரு பகுதியாக உளவியல் ரீதியான உறுதுணையும் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT