விளையாட்டு

IND vs SL | காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் சஞ்சு சாம்சன்

செய்திப்பிரிவு

மும்பை: இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து இந்திய வீரர் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியின் போது பவுண்டரி எல்லையின் அருகே பீல்டிங் செய்தபோது சஞ்சு சாம்சனின் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயம் காரணமாக தற்போது அணியில் இருந்தும் விலகியுள்ளார். காயத்தில் இருந்து மீண்டுவர பிசிசிஐ மருத்துவக் குழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதை அடுத்து தொடரில் இருந்து விலகியுள்ளார்.

28 வயதான சஞ்சு சாம்சன், கடந்த 2015 வாக்கில் இந்திய அணியில் அறிமுகமானார். இதுநாள் வரையில் அவர் மொத்தம் 11 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 330 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 296 ரன்களும் எடுத்துள்ளார் கேரளாவை சேர்ந்த சஞ்சு. ஆனாலும் அணியில் இவருக்கான வாய்ப்பு அணியில் தொடர்ந்து கிடைக்காமல் இருந்துவந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இலங்கை தொடரில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது காயம் காரணமாக வெளியேறியுள்ளது சஞ்சு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக ஜிதேஷ் சர்மாவை மாற்று வீரராக பிசிசிஐ அறிவித்துள்ளது. என்றாலும் ஆடும் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ராகுல் திரிபாதி களமிறக்கப்படலாம். ராகுல் திரிபாதி சில காலமாக இந்திய அணிக்கு தேர்வாகி வருகிறார். எனினும், இன்னும் ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சனுக்கு பதில் ஆடும் லெவனில் இடம்பெறும்பட்சத்தில் ராகுல் திரிபாதிக்கு அது அறிமுக ஆட்டமாக அமையும்.

SCROLL FOR NEXT