பாரிஸ்: உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்று வரலாறு படைத்தது. இந்தச் சூழலில் கிளப் அளவில் அவர் விளையாடி வரும் பிஎஸ்ஜி அணியுடன் இணைந்துள்ளார். இதையடுத்து அவருக்கு அதிரிபுதிரி வரவேற்பு கொடுத்து சிறப்பித்துள்ளது அந்த அணி.
கடந்த டிசம்பர் 18-ம் தேதி அன்று பிரான்ஸ் அணியை இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தியது அர்ஜென்டினா. இந்தப் போட்டியின் கடைசி நொடி வரை பரபரப்பு நீடித்தது. இதில் இதே பிஎஸ்ஜி கிளப் அணிக்காக களத்தில் இணைந்து விளையாடும் இரு துருவங்களான மெஸ்ஸியும், எம்பாப்பேவும் எதிரெதிராக சமர் செய்தனர்.
இந்தச் சூழலில் கடந்த மாதமே எம்பாப்பே மற்றும் பிரேசில் நாட்டை சேர்ந்த நெய்மரும், பிஎஸ்ஜி அணியில் இணைந்து லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்த அணியில் தற்போது மெஸ்ஸியும் இணைந்துள்ளார்.
உலகக் கோப்பையை வென்ற பின்னர் அணிக்கு முதல் முறையாக திரும்பிய கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ளது பிஎஸ்ஜி அணி. இது சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.