மார்னஸ் லபுஷேன் | படம்: ட்விட்டர் வீடியோ 
விளையாட்டு

AUS vs SA | களத்தில் பேட் செய்தபோது லைட்டர் கேட்ட லபுஷேன்; கரோனாவுடன் களத்தில் ஆஸி. வீரர்!

செய்திப்பிரிவு

சிட்னி: ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தின் போது களத்தில் பேட் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன், சிகரெட் லைட்டர் கேட்டதும், அந்த அணியின் ஆடும் லெவனில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீரர் ஒருவர் இடம்பிடித்ததும் கவனம் பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி அந்த அணியின் பேட்ஸ்மேன்களில் ஒருவரான லபுஷேன் களத்தில் பேட் செய்தபோது டக்-அவுட்டில் இருந்த சக அணியினரிடம் லைட்டர் வேண்டும் என சைகை மொழியில் கேட்டார். தொடர்ந்து அது கொண்டு வரப்பட்டது. அதை வைத்து தனது ஹெல்மெட்டில் இருந்த சில நூல் இழைகளை அகற்றினார். அதன் மூலம் பந்தை தெளிவாக பார்த்து ஆட முடியும் என்பதற்காக இதனை அவர் மேற்கொண்டுள்ளார்.

இது களத்தில் கலகலப்பான கலாட்டாவாக அமைந்தது. அதேபோல இந்தப் போட்டியின் ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவனில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 26 வயதான மேத்யூ ரென்ஷா இடம் பிடித்துள்ளார். இருந்தாலும் அவர் டக்-அவுட்டில் சக வீரர்களிடம் இருந்து சற்று தள்ளி அமர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் இதற்கு முன்னரும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடும் லெவனில் விளையாடி இடம்பிடித்துள்ளனர்.

முதல் நாள் ஆட்டத்தை பொறுத்தவரையில் 47 ஓவர்களை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 10 ரன்களிலும், லபுஷேன் 79 ரன்களிலும் அவுட்டாகி உள்ளனர். உஸ்மான் கவாஜா 54 ரன்களுடன் விளையாடி வருகிறார். ஸ்மித் களம் கண்டுள்ளார். போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.

மேத்யூ ரென்ஷா
SCROLL FOR NEXT