மும்பை: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமி உடற்தகுதி சான்றிதழ் வழங்கியதை தொடர்ந்து இந்திய அணிக்கு திரும்பி உள்ளார் பும்ரா.
பும்ரா, இந்திய அணிக்காக கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் விளையாடி இருந்தார். இதன் பின்னர்முதுகு வலி காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார்.
பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பயிற்சி மற்றும் சிகிச்சை எடுத்து வந்த பும்ரா தற்போது முழு உடற்தகுதியுடன் இருப்பதாக தேசிய கிரிக்கெட் அகாடமி சான்றிதழ் வழங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து அவரை, இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் தேர்வுக்குழுவினர் சேர்த்துள்ளனர். விரைவில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியுடன் பும்ரா இணைவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும்10-ம் தேதி குவாஹாட்டியில் நடைபெறுகிறது. 2-வது ஆட்டம் 12-ம்தேதி கொல்கத்தாவிலும், 3-வது ஆட்டம்15-ம் தேதி திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.