மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தமிழக அணி 44 ரன்களை சேர்ப்பதற்குள்ளேயே 4 முக்கிய விக்கெட்களை இழந்தது. சாய் சுதர்சன் 0, சாய் கிஷோர் 0, பாபா அபராஜித் 8, கேப்டன் பாபா இந்திரஜித் 9 ரன்களில் நடையை கட்டினர். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய நாராயண் ஜெகதீசன் 23, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 55, விஜய் சங்கர் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஷாருக் கான் 1, அஸ்வின் கிறிஸ்ட் 13, விக்னேஷ் 10 ரன்களில் வெளியேற தமிழக அணி 36.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மும்பை அணி சார்பில் துஷார் தேஷ்பாண்டே 5, ஷம்ஸ் முலானி 3 விக்கெட்கள் வீழ்த்தினர். தொடர்ந்து விளையாடிய மும்பை அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 41 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது.
பிரித்வி ஷா 35, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 0, அர்மான் ஜாபர் 4, கேப்டன் அஜிங்க்ய ரஹானே 42, ஹர்திக் தமோர் 10, ஷம்ஸ் முலானி 28 ரன்களில் ஆட்டமிழந்தனர். சர்பராஸ் கான் 46, தனுஷ் கோட்யான் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 39 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள மும்பை அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.