தீபக் ஹூடா மற்றும் அக்சர் படேல் 
விளையாட்டு

IND vs SL முதல் டி20: தீபக் ஹூடா விளாசல் - இந்திய அணி 162 ரன்கள் சேர்ப்பு

செய்திப்பிரிவு

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 162 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்தியாவில் இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. தற்போது இரு அணிகளும் டி20 தொடரில் பலப்பரீட்சை செய்து வருகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி மும்பை நகரின் வான்கடே மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி இந்தப் போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டன் பாண்டியா 29 ரன்களில் வெளியேறினார். பின்னர் இணைந்த தீபக் ஹூடா 23 பந்துகளில் 41 ரன்களும், அக்சர் படேல் 20 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். இருவரும் கடைசி வரையில் தங்கள் விக்கெட்டுகளை இழக்கவில்லை. இதில் ஹூடா 4 சிக்ஸர்களை விளாசினார்.

இலங்கை அணி பவுலர்கள் தங்களது தரமான லைன் மற்றும் லெந்தினால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆட்டத்தின் சில ஓவர்களில் அச்சுறுத்தினர். தற்போது இலங்கை அணி 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஒரு கட்டத்தில் 150 ரன்களை கடப்பதே சவாலான காரியமாக இருந்தது. அதனை தீபக் ஹூடா, அக்சர் படேல் கூட்டணி தகர்த்தது. இருவரும் 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

SCROLL FOR NEXT