உனத்கட் மற்றும் சவுராஷ்டிரா வீரர்கள் 
விளையாட்டு

ரஞ்சிக் கோப்பை: 12 ஓவர்கள், 39 ரன்கள், 8 விக்கெட்டுகள் - டெல்லியை காலி செய்த உனத்கட்

செய்திப்பிரிவு

ராஜ்கோட்: நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரின் நான்காவது சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லி அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 12 ஓவர்கள் வீசி 8 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் சவுராஷ்டிரா அணியின் கேப்டன் ஜெயதேவ் உனத்கட். இதில் ஒரு ஹாட்-ட்ரிக்கும் அடங்கும்.

31 வயதான உனத்கட் அண்மையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தார். இந்தச் சூழலில் இந்தியா திரும்பியதும் அவர் ரஞ்சிக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இடது கை பவுலரான அவருக்கு ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உள்ளூர் கிரிக்கெட்டில் தனது கவனத்தை அவர் செலுத்தி வருகிறார். குரூப்-சி பிரிவில் உள்ள டெல்லி மற்றும் சவுராஷ்டிரா அணிகள் ராஜ்கோட்டில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டி இன்றுதான் துவங்கியது.

டெல்லி அணி 133 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதற்கு முழு காரணம் உனத்கட் கொடுத்த அப்செட்தான். 12 ஓவர்கள் வீசி 39 ரன்கள் மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். போட்டியின் முதல் ஓவரில் அவர் ஹாட்-ட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும்.

நடப்பு சீசனில் வெறும் 8.3 ஓவர்களில் வெறும் 35 ரன்கள் மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் உத்தராகண்ட் அணியை சேர்ந்த தீபக் தபோலா என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT