கால்பந்து வரலாற்றில் பிரேசில் வீரர்கள், ரசிகர்கள் மனதில் ஆறாத வடுவான ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதித் தோல்விக்குப் பிறகு உத்தி ரீதியாக பயிற்சியாளர் ஸ்கொலாரி செய்ததாக சில தவறுகள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆட்டம் தொடங்க 6 மணி நேரம் இருந்த போது ஸ்கொலாரி அணித் தேர்வில் மாற்றங்கள் செய்துள்ளார் மற்றும் உத்திகளையும் மாற்றியுள்ளார்.
ஜெர்மனியின் பலமான நடுக்கள வீரர்களான பாஸ்டியன் ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர், சமி கெடிரா, மற்றும் டொனி குரூஸ் ஆகியோரைக் கவிழ்க்க, பிரேசில் அணியில் லூயி குஸ்தாவோ, ஃபெர்னாண்டினோ, பாலினியோ ஆகியோர் தயார் செய்யப்பட்டிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பாலினியோவை விடுத்து பெர்னாட் என்ற ஒரு வீரரை அனுப்பினார் ஸ்கொலாரி.
பெர்னாடை சேர்க்கும் திட்டம் முதலில் இல்லை. மேலும் திடீரென பாலினியோவை இறக்காததும் அதிர்ச்சியளிக்க, திணறி வரும் ஃபிரெட்டை களமிறக்கியதும் வீரர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் உறுதியான பிரேசில் டிஃபென்ண்டர் தியாகோ சில்வா இடத்தில் தாந்தே என்ற வீரரை இறக்கியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அவர் உலகக் கோப்பைக்கு முன்னதாக 3 மாதங்களாக கிளப்பிற்கோ, பிரேசிலுக்கோ எந்த ஆட்டத்திலும் ஆடவில்லை.
டேவிட் லூயிஸை கேப்டனாக்கியதை சிலர் விமர்சிக்க, களத்தில் அவர் அவ்வளவாக சவுகரியமாக உணராத பகுதியில் நிறுத்தப்பட்டார். தடுப்பணையின் மையத்தில் இடது புறம் அவர் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார், இது அவருக்குப் பழக்கமில்லாத ஒரு பகுதி என்று தற்போது கூறப்படுகிறது.
எல்லாவற்றையும் விட பெர்னாடைக் களமிறக்கியது பெரும் தவறு என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆனாலும் கேள்வி என்னவென்றால், இந்தத் தவறுகளையெல்லாம் 2-1 அல்லது 1-0, அல்லது 3-2 என்று தோற்றிருந்தால் கூறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. நடந்தது ஒரு படுகளம், 7-1 என்ற தோல்வி ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏதோ சாக்குப் போக்கான காரணங்களைக் கூறி ஸ்கொலாரியை பலிகடாவாக்கி வெளியேற்ற முயற்சிகள் நடப்பதாகவும் சில தரப்பினர் வாதிடுகின்றனர்