மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சர் ஆகியுள்ளது ‘கில்லர் ஆடை பிராண்ட்’. நாளை இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள புதிய படங்களின் அடிப்படையில் இது உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் இதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக இருந்த எம்பிஎல் நிறுவனம் வெளியேறி உள்ளது. கடந்த 2020 நவம்பர் முதல் அந்நிறுவனம் ஸ்பான்சராக இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட சூழலில் தனது ஒப்பந்தத்தை பிசிசிஐ-யுடன் முறித்துக் கொண்டு வெளியேறி உள்ளது அந்நிறுவனம். 2023 டிசம்பர் வரையில் இரு தரப்பும் அப்போது ஒப்பந்தம் போட்டிருந்தன.
இதற்கு முன்னர் நைக் நிறுவனம் 2016 முதல் 2020 வரையில் கிட் ஸ்பான்சராக இருந்தது. இனி கில்லர் நிறுவனம் தயார் செய்யும் ஜெர்ஸிகளைதான் இந்திய வீரர்கள் அணிந்து விளையாடுவார்கள் என தெரிகிறது. அதேபோல வரும் மார்ச் மாதம் பைஜூஸ் நிறுவனம் தனது ஜெர்ஸி ஸ்பான்சர் ஒப்பந்தத்தை நிறைவு செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்.