ஆசாத் ஷபீக்கிடம் ‘சச்சின் டெண்டுல்கர்’ பேட்டிங்கை இனம் கண்ட 'அசாதாரண' சிந்தனை மிக்க பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தற்போது அந்நாட்டு வீரர் பாபர் ஆஸமிடம் விராட் கோலியின் தன்மைகளை அடையாளம் கண்டுள்ளார்.
பசுந்தரை பிட்சில் ஹாமில்டன் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக 90 ரன்களை எடுத்த பாபர் ஆஸமிடம் விராட் கோலியைக் காண்கிறார் மிக்கி ஆர்தர்.
சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மிக்கி ஆர்தர் கூறும்போது, “பாபர் ஆசம் ஒரு இளம் வீரர், இவர் தனித்துவமான திறமை படைத்தவர் இவர் நிச்சயம் விராட் கோலிக்கு இணையான வீரர். இது கொஞ்சம் அதிகப்படியான புகழாரம்தான் எனினும் அவர் இந்த இடத்தில்தான் உள்ளார்”, என்றார்.
19 வயதில் உள்ளே வந்த விராட் கோலி 176 ஒருநாள் போட்டிகளில் 7,570 ரன்களை 52.93 என்ற சராசரியுடனும், டெஸ்ட் போட்டிகளில் 48.28 என்ற சராசரியுடன் திகழ்பவர். ஒருநாள் போட்டிகளில் 26 சதங்களையும், டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்களையும் எடுத்த விராட் கோலி டி20 போட்டிகளில் 57.13 என்ற சராசரி வைத்துள்ளார்.
பாபர் ஆஸம் 18 ஒருநாள் போட்டிகளில் 886 ரன்களை 52.11 என்ற சராசரியில் வைத்துள்ளார். இதில் 3 சதங்கள். முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் பாபர் ஆஸம், 232 ரன்களை 2 அரைசதங்களுடன் எடுத்துள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிசம்பர் 15-ம் தேதியன்று தொடங்கும் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் விளையாடுகிறது.
ஒரு பயிற்சியாளராக வீரர்களை உத்வேகப்படுத்துவது அவரது கடமை, அதனால் சில வேளைகளில் கொஞ்சம் அதிகப்படியான ஒப்பீடும் தேவைப்படுகிறது, இதைத்தான் மிக்கி ஆர்தர் செய்துள்ளார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.