விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: கால் இறுதியில் இந்தியா

செய்திப்பிரிவு

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் 5-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.

லக்னோவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் கனடாவை வீழ்த்திய நிலையில் நேற்று 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதியது. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் ஜேக் லீ, பீல்டு கோல் அடிக்க இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகித்தது.

24-வது நிமிடத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது. பர்வீந்தர் சிங் அடித்த பீல்டு கோலால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. அடுத்த 13 இடங்களில் இந்தியா மேலும் இரு கோல்கள் அடித்தது. 35-வது நிமிடத்தில் அர்மான் குரேஷி பீல்டு கோலும், 37-வது நிமிடத்தில் ஹர்மான்பிரீத் சிங், பெனால்டி கார்னர் மூலம் கோல் அடிக்க இந்திய அணி 3-1 என முன்னிலை பெற்றது.

அடுத்த 8-வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங், இந்திய அணியின் 4-வது கோலை அடிக்க இங்கிலாந்து அணி அதிர்ச்சியில் உறைந்தது. 59-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை வருண் குமார் அருமையாக கோலாக மாற்றினார்.

இங்கிலாந்து வீரர்களான வில்கால்னன் 63-வது நிமிடத்தி லும், எட்வர்டு ஹார்லெர் 67-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். அதன்பின்னர் கோல்கள் அடிக்கப்படவில்லை. முடிவில் இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.

SCROLL FOR NEXT