கோப்புப்படம் 
விளையாட்டு

IPL 2023 ஏலம் | சாம் கரன் - ரூ.18.50 கோடி, க்ரீன் - ரூ.17.50 கோடி, ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி

செய்திப்பிரிவு

கொச்சி: எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனுக்கான ஏலம் கொச்சி நகரில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஆல் ரவுண்டர்களுக்கான வீரர்கள் அடங்கிய பட்டியல் ஏலத்திற்கு வந்தபோது பத்து அணிகளும் அதில் இடம்பெற்ற வீரர்களை வாங்க போட்டி போட்டன. இந்தப் பிரிவில் முதல் வீரராக ஷகிப் அல் ஹசன் பெயர் அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.

இரண்டாவதாக இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கரன் பெயர் வந்தது. அவரது பெயர் அறிவிக்கப்பட்டது முதலே மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், சென்னை மற்றும் பஞ்சாப் என ஐந்து அணிகள் அவரை வாங்க ஆர்வம் காட்டின. இறுதியில் 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி அவரை வாங்கியது. அவரின் அடிப்படை விலை 2 கோடி ரூபாய். இதன்மூலம் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் ஆகியுள்ளார் சாம் கரன்.

இடது கை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர். முக்கியமாக ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியே கடத்துவதில் வல்லவர். அற்புதமான பவுலர். அண்மையில் டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக பந்து வீசி இருந்தார். அதன் மூலம் மொத்தம் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 32 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

ஓடியன் ஸ்மித்தை குஜராத் அணியும், சிக்கந்தர் ராசாவை பஞ்சாப் அணியும் இருவரும் அவர்களது அடிப்படை விலையான 50 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டனர். ஜேசன் ஹோல்டரை ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் வாங்க ஆர்வம் காட்டின. இறுதியில் 5.75 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி அவரை வாங்கியது.

அதன்பின்னர் கேமரூன் க்ரீன் பெயர் அறிவிக்கப்பட்டது. 23 வயதான ஆஸ்திரேலிய நாட்டு வீரர். ஏலத்தில் இவரது அடிப்படை விலை ரூ.2 கோடி. பேட்டிங் மற்றும் பவுலிங் என சகலத்திலும் கலக்கும் தரமான ஆல் ரவுண்டர். இந்தியாவில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற டி20 தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 173.75. இவரை ஏலத்தில் வாங்க மும்பை மற்றும் பெங்களூரு அணிகளிடையே போட்டி நிலவியது. இறுதியில் 17.50 கோடி ரூபாய்க்கு அவரை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.

அதன் பின்னர் பென் ஸ்டோக்ஸ் பெயர் அறிவிக்கப்பட்டது. அவரை ரூ.16.2 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஸ்டோக்ஸை வாங்க ராஜஸ்தான், பெங்களூரு, லக்னோ, ஹைதராபாத், சென்னை அணிகளுக்கு மத்தியில் போட்டி இருந்து.

ஆல் ரவுண்டர்கள் அடங்கிய இந்த பட்டியலில் சாம் கரனுக்கு ரூ.18.50 கோடி, க்ரீனுக்கு ரூ.17.50 கோடி, ஸ்டோக்ஸுக்கு ரூ.16.25 கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளன அணிகள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்து தமிழ் திசையில் ஏலத்தில் அதிக டிமாண்ட் உள்ள வீரர்கள் என்ற கட்டுரையில் இவர்கள் மூவரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தோம்.

SCROLL FOR NEXT