விளையாட்டு

87 இடங்களுக்கு 405 பேர் மல்லுக்கட்டல் | கொச்சியில் இன்று ஐபிஎல் வீரர்கள் ஏலம் - சேம் கரண் அதிக விலைபோக வாய்ப்பு

செய்திப்பிரிவு

கொச்சி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இம்முறை 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் விளையாட உள்ளன. இந்தத் தொடருக்கான மினி வீரர்கள் ஏலம் கொச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் நடைபெறுகிறது. 10 அணிகளிலும் 87 இடங்களில் காலியாக உள்ளன. இதில் வெளிநாட்டு வீரர்கள் 30 பேரும் அடங்குவார்கள்.

மினி ஏலத்தின் இறுதிப் பட்டியலில் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள். இன்றைய ஏலத்தில் இங்கிலாந்து ஆல் ரவுண்டரான சேம் கரணை பெரும் தொகைக்கு வாங்க பல்வேறு அணிகள் போட்டியிடக்கூடும். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சேம் கரண் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தற்போது 24 வயதுதான் ஆகிறது. இதனால் அவரை ஏலம் எடுக்கும் அணி நீண்டகால முதலீடாக பார்க்கும்.

2019-ம் ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ், சேம் கரணை கோடீஸ்வரராக்கியது. அதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சேம் கரணை ஏலம் எடுத்தது. இந்த ஆண்டு காயம் காரணமாக சேம் கரண் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. அவரது அபாரமான பார்ம் காரணமாக சென்னை அணியே மீண்டும் அவரை விலைக்கு வாங்குவதில் முனைப்பு காட்டக்கூடும். சேம் கரணின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக் ஆகியோரை ஏலம் எடுப்பதிலும் பல்வேறு அணிகள் தீவிரம் காட்டக்கூடும். பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தின் கடினமான சூழ்நிலைகளில் சிறந்த திறனை வெளிப்படுத்தக்கூடியவர். அதேவேளையில் ஹாரி புரூக் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 சதங்கள் விளாசியிருந்தார். மேலும் குறுகிய வடிவிலான போட்டிகளில் தனது திறனை ஹாரி புரூக் ஏற்கெனவே நிரூபித்துள்ளார்.

ஸ்டோக்ஸின் அடிப்படை விலை ரூ.2 கோடியாகவும், ஹாரி புரூக்கின் அடிப்படை விலை ரூ.1.50 கோடியாகவும் உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனும் ஏலத்தில் கவனிக்கத்தக்க வீரராக உள்ளார். அவருடன் கடந்த 12 மாதங்களில் சிறந்த டி 20 வீரர்களில் ஒருவராக திகழ்ந்த ஜிம்பாப்வே ஆல்-ரவுண்டர் சிக்கந்தர் ராசாவும் அதிகதொகைக்கு ஏலம் எடுக்கப்படக்கூடும்.

இந்திய அணிக்காக அறிமுகம் ஆகாத வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷிவம் மாவி, யாஷ் தாக்குர் ஆகியோர் ஏலத்தில் கவனம் பெறக்கூடும். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சமீபத்தில் தொடர்ச்சியாக 5 சதங்கள் விளாசிய நாராயண் ஜெகதீசனை வாங்குவதில் அணிகள் ஆர்வம் காட்டக்கூடும். அவரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் விடுவித்திருந்தது.

SCROLL FOR NEXT