விளையாட்டு

சென்னை ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்று 31-ம் தேதி தொடக்கம்- இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடிகளுக்கு வைல்ட் கார்டு

செய்திப்பிரிவு

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரதான சுற்றில் பங்கேற்கவுள்ள 28 பேர் உறுதி செய்யப்பட்டுவிட்டனர். எஞ்சிய 4 வீரர்களை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று வரும் 31-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதில் கனடா, ரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்லோவேகியா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 14 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்தியாவின் முன்னணி வீரரான ராம்குமாருடன் சாகேத் மைனேனிக்கும் (தரவரிசை 194), வைல்ட்கார்டு வழங்கப் பட்டுவிட்டதால் குரோஷியாவின் பிராங்கோ சுகோர் (தரவரிசை 216) தகுதிச்சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்த முறை சென்னை ஓபனில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் மரின் சிலிச்சுக்கு போட்டித் தரவரி சையில் முதலிடம் கிடைத்துள்ளது. 14-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்ட்டோ அகட், அதே நாட்டை சேர்ந்த 27-ம் நிலை வீரரான ஆல்பர்ட் ரேமோஸ், 35-ம் நிலை வீரரான ஸ்லோவேகியாவின் மார்ட்டின் கிளிஸான், 48-வது இடத்தில் குரோஷியாவின் போர்னா கோரிச் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இம்முறை கலக்கக் காத்திருக்கின்றனர்.

ஸ்பெயின் டாமி ராப்ரீடோ, ரஷ்யாவின் மிகைல் யூஸ்னி ஆகியோரும் இந்த முறை பங்கேற்கின்றனர். இவர்களில் டாமி ராப்ரீடோ 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஓபனில் களம் காணுகிறார்.

தகுதிச்சுற்றில் இங்கிலாந்தின் நான்காம் நிலை வீரரான 27 வயதான அல்ஜாஸ் பெடேன், தென் கொரியாவின் வளர்ந்து வரும் இளம் வீரரான ஹியோன் சுங் ஹியோன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். அல்ஜாஸ் பெடேன், 2015-ல் நடைபெற்ற சென்னை ஓபனில் இறுதிச் சுற்று வரை முன்னேறியிருந் தார். அப்போது அவர், வாவ்ரிங்கா விடம் தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. டேவிஸ் கோப்பை போட்டியில் இங்கி லாந்து அணிக்காகவும் பெடேன் பங்கேற்றுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் சர்வதேச தரவரிசையில் 45-வது இடத்துக்கு முன்னேறி னார்.

20 வயதான தென் கொரியாவின் சுங், 2015-ம் ஆண்டு ஏடிபியின் சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்றவர் ஆவார். 2013-ல் நடைபெற்ற ஜூனியர் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளார். ஜூனியர் தரவரிசையில் அதிகபட்சமாக 7-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர் சீனியர் தரவரிசையில் ஓர் ஆண்டுக்குள்ளாகவே 120 இடங்களுக்கு மேல் முன்னேற்றம் கண்டு 51-வது இடத்தைப் பிடித்தார். டேவிஸ் கோப்பை போட்டியில் தென் கொரியாவுக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இதுதவிர தரவரிசையில் 110-வது இடத்தில் உள்ள ஆர்ஜென்டினாவின் நிகோலஸ் கிகெர், ஜோசப் கோவாலிக் (117), ஜூர்கன் மெல்ஸர் (136), மார்கோ டிரங்கெல்லட்டி (146), பெடரிகோ கெயோ (175) உள்ளிட்டோரும் சென்னை ஓபன் தகுதிச்சுற்றில் களம் காணுகிறார்கள்.

இந்திய ஜோடிகள்

இரட்டையர் பிரிவில் மொத்தம் 12 ஜோடிகள் களமிறங்குகிறது. இதில் இந்தியா சார்பில் 4 ஜோடிகள் விளையாடுகிறது. இந்தியாவின் சாதேத் மைனேனி-ராம் குமார் ராமநாதன் மற்றும் ராம் பாலாஜி-விஷ்ணுவர்தன் ஜோடிகளுக்கு வைல்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களை தவிர ரோகன் போபண்ணா-ஜுவன் நெடுஞ் செழியன், பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடிகளும் பங்கேற்கின்றன. இந்த இரு ஜோடிகளும் தரவரிசை அடிப்படையில் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

இதுதவிர 7 முறை ஒலிம்பிக் கில் பங்கேற்றவரும், 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரு மான லியாண்டர் பயஸூம் களமிறங் குகிறார். அவர் பிரேசிலின் ஆன்ட்ரே சாவுடன் இணைந்து விளையாடுகிறார்.

தகுதிச்சுற்று வீரர்கள்

அல்ஜாஸ் பெடேன் (இங்கி லாந்து), ஜோசப் கோவாலிக் (ஸ்லோவேகியா), மார்கோ செக்கினாட்டோ (இத்தாலி), அலெக்சாண்டர் குட்ரியாவ்ட்சேவ் (ரஷியா), ஹியோன் சுங் (தென் கொரியா), ஜூர்கன் மெல்ஸர் (ஆஸ்திரியா), ஸ்டீவன் டியெஸ் (கனடா), ஹிரோகி மோரியா (ஜப்பான்), மட்டியோ டொனாட்டி (இத்தாலி), பெடரிக்கோ கெயோ (இத்தாலி), பிராங்கோ சுகோர் (குரோஷியா ), மார்கோ டிரங்கெல்லிட்டி (ஆர்ஜென்டீனா), நிகோலஸ் கிகெர் (ஆர்ஜென் டீனா), மில்ஜான் ஜெகிச் (செர்பியா).

SCROLL FOR NEXT