பியூனஸ் அய்ரஸ்: நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்றுள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில், அந்த நாட்டின் கரன்சி நோட்டில் மெஸ்ஸியின் புகைப்படத்தை அச்சிடுவது குறித்து அர்ஜென்டினா குடியரசின் மத்திய வங்கி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை செய்தியாக வெளியிட்டுள்ளது அந்நாட்டின் வணிகப் பத்திரிகையான ‘எல் பைனான்சிரோ’. ஆனாலும் இந்த ஐடியாவை மத்திய வங்கி உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வேடிக்கையாக முன்மொழியப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இது குறித்து உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே உறுப்பினர்கள் பேசி இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மெஸ்ஸி படங்கள் அடங்கிய மாதிரி ரூபாய் நோட்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.
கடந்த 1978 உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றபோது அதன் நினைவாக அந்த நாட்டில் நாணயங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நாட்டின் மத்திய வங்கி முன்மொழிந்துள்ளதாக சொல்லப்படும் கரன்சி நோட்டில் அணியின் பயிற்சியாளர் படமும் பின்பக்கத்தில் இருக்கும் எனத் தகவல் பரவி வருகிறது.