உலகக் கோப்பை ஹாக்கி டிராபிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. படம்: எம்.முத்து கணேஷ் 
விளையாட்டு

உலகக் கோப்பை ஹாக்கி டிராபி சென்னை வருகை

செய்திப்பிரிவு

சென்னை: ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ரூர்கேலாவில் வரும் ஜனவரி 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட 16 அணிகள் இந்தத் தொடரில் கலந்து கொள்கின்றன. ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜனவரி 13-ம் தேதி ஸ்பெயினுடன் மோதுகிறது. 2-வது ஆட்டத்தில் 15-ம் தேதி இங்கிலாந்துடனும் கடைசி லீக் ஆட்டத்தில் 19-ம் தேதி வேல்ஸ் அணியுடனும் இந்தியா மோதுகிறது.

உலகக் கோப்பை ஹாக்கி தொடரை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு உலகக் கோப்பை ஹாக்கியின் டிராபி சுற்றுப்பயணமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக உலகக் கோப்பை ஹாக்கி டிராபி மும்பையிலிருந்து விமானம் மூலமாக நேற்று சென்னை வந்தடைந்தது.

உலகக் கோப்பை டிராபிக்கு சென்னை விமான நிலையத்தில் ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு ஹாக்கி சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து டிராபியை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

உலகக் கோப்பை ஹாக்கி தொடரை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அடுத்த 15 நாட்களில் 100 பள்ளிகளில் விழிப்புணர்வு ஹாக்கி போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT